”உபி முதல்வர் பேரணியில் குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லை” - வானதி சீனிவாசன்
இரு தரப்பினரிடையே சாதாரணமாக நடைபெற்ற வாக்கு வாதத்தை திட்டமிட்டு சிலர் வீன் வதந்தியை ஏற்படுத்தி வருகின்றனர் என கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது கோவை புலியகுளம் பகுதியில் இருந்து பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணி டவுன்ஹால் பகுதியை கடக்கும்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதட்டமான சூழலில் கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. பரப்புரையில் ஏற்பட்ட பதட்டமான சூழல் குறித்து பல தரப்பினரும் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், காவல்துறையினர் இருதரப்பினர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், “உபி முதல்வர் கோவை வருகையின் போது நடைபெற்ற பேரணியில் குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லை, இரு தரப்பிடையே சாதாரணமாக நடைபெற்ற வாக்கு வாதத்தை திட்டமிட்டு சிலர் வீண் வதந்தியை ஏற்படுத்தி வருகின்றனர். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் சிறுபான்மை மக்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்து விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். முத்தலாக் சட்டத்திற்குப் பிறகு இஸ்லாமிய பெண்கள் பாஜகவிற்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். பாஜக தலைவர்களை பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை இல்லை” என்றார்.