மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போனால் மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ கூறும்போது, ’ கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும் புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்திருப்பது இடி விழுவதை போன்று உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை அறிந்தும் தமிழக அரசு டெல்லியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து கிடப்பது கடும் கண்டனத்திற்குரியது. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடலாம் என மத்திய, மாநில அரசுகள் கருதுகிறது. மத்திய அரசின் வஞ்சகத்திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போனால் மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும். தமிழகத்தை நாசப்படுத்தும் திட்டங்களை கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசுகள் போட்டிப்போட்டு செயல்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.