ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால் சிங்களவர்கள் மிரட்டினர்: வைகோ புகார்
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகார் தெரிவித்துள்ளார். பிரச்னை ஏற்படுத்தி தன்னை வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கையின், ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐந்து ஆறு முறை வைகோ உரையாற்றியுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக வைகோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் பேசிய அவர், " ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நான் உரையாற்றிய சில நிமிடங்களில், இலங்கை நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என பெண்மணி ஒருவர் கேட்டார். நான் சற்று குழப்பத்தில் நீங்கள் சிங்களப் பெண்மணியா எனக் கேட்டேன். ஆமாம் என்றார். உங்களை போன்ற பெண்களான ஈழத்தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே? அவர்களை பற்றி நான் ஏன் பேசக்கூடாது எனக் கேட்டேன். அந்த சமயத்தில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பேர் என்னை சூழந்து கொண்டனர். மேலும், பிரச்னை ஏற்படுத்தி என்னை வெளியேற்ற திட்டமிட்டனர். அதில் ஒருவர், மற்றொருவரிடம் இவர் தான் வைகோ என்றார். தொடர்ந்து அவர்கள் என்னைப் பார்த்தபடி முறைத்துக் கொண்டிருந்தனர். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிங்களவர்கள் அங்கு வந்திருந்தினர். அவர்கள் என்னை மிரட்டினார்கள்" என்றார்.