“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்

“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்
“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்

நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘எந்த 7 பேர் ? அது பற்றி எனக்கு தெரியாது’ என்று ரஜினி பதில் அளித்தார். 

அதேபோல், பாஜகவுக்கு எதிரான பல்வேறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைப்பதால், பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினி பதில் அளித்திருந்தார். இதனையடுத்து, எந்த 7 பேர் என்று ரஜினி சொன்னது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பற்றி எனக்கு தெரியாத அளவிற்கு நான் முட்டாள் அல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர். கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் விடுதலை என்று கேட்டிருந்தால் புரிந்திருக்கும். வெறும் 7 பேர் விடுதலை என்று கேட்டதால் எனக்கு புரியவில்லை” எனத் தெரிவித்தார். 

மேலும் எதிர்க்கட்சிகளுக்கே பாஜக ஆபத்தான கட்சி என்று நான் பதில் சொன்னேன் எனவும் பாஜக ஆபத்தான கட்சியா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது குறித்து கேட்டதற்கு 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், 7பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது எனவும் மத்திய அரசிடம் கேட்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார். 

7பேரின் விடுதலை விவகாரத்தில் மாநில அரசிடம் முழுமையான வேகம் இல்லை என வைகோ தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com