“நான்தான் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் சொன்னேன்” - வைகோ
தேச துரோக வழக்கில் தண்டனை கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நான் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதாக இருந்தால் மதிமுகவுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தத்தின்போது ஸ்டாலின் கூறினார். அதன் அடிப்படையிலேயே மதிமுகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
தேச துரோக வழக்கில் தண்டனை கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற வழக்கில் இதுவரை யாருக்கும் தண்டனை வழங்கியது கிடையாது.
ஒருவேளை நான் தண்டனை பெறப்பட்டு போட்டியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வேறொரு ஏற்பாட்டை செய்து வைத்து கொள்ளுங்கள் என்று நான்தான் ஸ்டாலினிடம் கூறினேன். அதன் அடிப்படையில் என்.ஆர். இளங்கோவை மாற்று ஏற்பாடாக திமுக களமிறக்கியுள்ளது. இதனால் தேவையில்லாத விவாதங்கள் வேண்டாம். என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்படும் என நான் நம்புகிறேன். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டால் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை இளங்கோ திரும்ப பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.