
கிராமக் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக நடத்தி வருகிறார்கள். இதில் உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று சேர்கிறார்கள்.
இத்தகைய கோயில் திருவிழாக்களையொட்டி கிராமங்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள், ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடக்கும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் திருக்கோயில் விழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. அதைவிட கொடுமை என்னவென்றால் விழா கமிட்டியினர் கோயில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
எனவே “மக்களின் நண்பன்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் காவல்துறை நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒலிப்பெருக்கி பயன்படுத்திக் கொள்ளும் நேரத்தை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை மாற்ற வேண்டும். மேலும் விழாக்களுக்கு அனுமதி பெரும் முறையை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அனுமதி வழங்கிடும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி காவல்துறை பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்தும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என வைகோ கூறியுள்ளார்.