மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..? 30-ஆம் தேதி முடிவு
மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து வரும் 30-ஆம் தேதி நடைபெறும் மதிமுக கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் ஜூலை 18-ஆம் தேதி நடக்கும் தேர்தல் மூலம் அதிமுகவை சேர்ந்த 3 பேரும், திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக முடியும்.
ஏற்கெனவே நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனக் கூறியதால்தான் திமுகவுடன் மதிமுக உடன்படிக்கை செய்துக் கொண்டது. இந்நிலையில் மதிமுக உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்த முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.