“அவர்கள் யாருக்கு ஆதரவு என்பது குழந்தைக்குகூட தெரியும்” - வைகைச் செல்வன்

“அவர்கள் யாருக்கு ஆதரவு என்பது குழந்தைக்குகூட தெரியும்” - வைகைச் செல்வன்
“அவர்கள் யாருக்கு ஆதரவு என்பது குழந்தைக்குகூட தெரியும்” - வைகைச் செல்வன்

இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது குழந்தைக்கு கூடத் தெரியும் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். 

அமமுகவில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூவரும் பொறுப்பில் இருப்பதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் 3 எம்.எல்.ஏக்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவர்கள். ஆனால் இந்தக் கட்சிக்கு எதிராக அமமுகவுடன் இணைந்து அக்கட்சியின் பொறுப்பை பெற்றிருக்கின்றனர். 

மேலும் அமமுகவின் தற்போதைய சின்னமாக இருக்கக்கூடிய பரிசு பெட்டகத்திற்கு வாக்கு வழங்க வேண்டும் என்று இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று பல்வேறு விதங்களில் கட்சிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டிருக்கிறார்கள். எந்தக் கட்சி இவர்களை எம்.எல்.ஏக்கள் ஆக்கியதோ அந்தக் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனவே அரசு கொறடா அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

திமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் மாற்று கட்சிக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் பார்த்து கொண்டு இருப்பார்களா? அதிமுகவை பலவீனமாக்கும் முயற்சியிலும் அச்சுறுத்துகிற முயற்சியிலும் இந்த 3 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது குழந்தைகளுக்கு கூடத் தெரியும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com