காலி இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நடப்பாண்டு இறுதிக்குள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக கூறினார். அத்துடன் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிதாக 42 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது உள்ள தமிழக அரசு, அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவாதகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.