“யாருக்கா இந்த அறிவாளி?” - தமிழிசைக்கு உதயநிதி கேள்வி
யாருக்கு தேவையோ அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து முரசொலி அறக்கட்டளையின் சட்டவரைவை படிக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். சில சமயங்களில் திமுக நிர்வாகிகள் எங்காவது தவறு செய்து, அது ட்விட்டரில் ட்ரெண்டானால் அதற்கு வருத்தம் கேட்கவும் அவர் தயங்குவதில்லை.
இதைத்தொடர்ந்து ஒரு நெட்டிசன் பாஜக தலைவர்களின் வாரிசுகள் அக்கட்சியில் பதவி வகிப்பதை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா, “பாஜகவில் யாரும் எந்தவித பரிந்துரையும் இன்றி தலைவர் ஆகியவர்கள். அனைத்து எம்.எல்.ஏ., மற்றும் எம்.பிக்களும் அப்படித்தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றோ அல்லது ராஜிவ், சோனியா, ராகுல் போன்றோ என குடும்ப ரீதியில் வந்து கட்சியை கட்டுப்படுத்தவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. திமுக அறக்கட்டளையின் அறங்காவலராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு, அவர் கோடான கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார். அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டு புதியதுதான்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நேற்று பதிலளித்த உதயநிதி, “நான் திமுக அறக்கட்டளையின் அறங்காவலர் என நீங்கள் நிரூபித்தால், நான் உங்கள் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைவது என்ற மோசமான தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மேலும் ஒரு கேள்வியை எஸ்.ஜி.சூர்யா முன்வைத்தார். அதில், “நீங்கள் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருந்தால் முரசொலி அறக்கட்டளையின் பைலா- வை படித்து காண்பிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “சூர்யா, உங்களுக்கு நிர்வாகத்திற்கும் அறங்காவலருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? யாருக்கு தேவையோ அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து முரசொலி அறக்கட்டளையின் சட்டவரைவை படித்து பார்க்கலாம். அடுத்தமுறை உங்களின் முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தமிழிசை அக்கா... யார் இந்த அறிவாளி? தயவு செய்து பதில் கொடுங்கள். இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியல.” என்று காமெடியாக பதிவிட்டிருக்கிறார்.