”ஏமாந்துட்டோம்! இப்போதான் தெரியுது”-நித்தி.,யின் கைலாசா ஒப்பந்தத்தை ரத்து செய்த நியூயார்க்

”ஏமாந்துட்டோம்! இப்போதான் தெரியுது”-நித்தி.,யின் கைலாசா ஒப்பந்தத்தை ரத்து செய்த நியூயார்க்
”ஏமாந்துட்டோம்! இப்போதான் தெரியுது”-நித்தி.,யின் கைலாசா ஒப்பந்தத்தை ரத்து செய்த நியூயார்க்

சலசலப்புக்கும், கிசுகிசுக்களுக்கும், பரபரப்புக்கும் கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் இருப்போர்களில் ஒருவர்தான் நித்யானந்தா. ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரி சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இதற்கடுத்தபடியாக எங்கே இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாத, வெளியுலகுக்கு ஒரு கற்பனை நாடாக இருக்கும் கைலாசாவுக்கு அங்கீகாரம் பெறும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரத்துடன் ஒரு சிஸ்டர் சிட்டி என்ற ஒப்பந்தத்தையும் போட்டிருந்தார் நித்யானந்தா.

இந்த செய்தி உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா தரப்பிலிருந்து நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் பங்கேற்று தங்களது நாட்டுக்கும், சுயபாணி கடவுளான நித்யானந்தாவுக்கு பாதுகாப்பும் கேட்டு வலியுறுத்தினார்களாம்.

ஆனால் கற்பனையான தேசத்துக்கு இந்த அங்கீகாரத்தை கொடுக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஐ.நா கூட்டத்தின் பங்கேற்றதை வைத்து, கைலாசாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே நித்யானந்தா தரப்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுக்கான கவனத்தை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில்தான் நியூயார்க்கின் நெவார்க் நகரம், கைலாசா உடனான தனது சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்து, நித்யானந்தா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பேசியுள்ள நெவார்க் நகர தகவல்துறை செயலாளர் சூசன் கரோஃபலோ, “இப்போதுதான் நித்யானந்தாவின் கைலாசாவை பற்றி அறிந்தோம். இதனால் நியூயார்க் கவுன்சில் இதன் மீது நடவடிக்கை எடுத்து சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது” என்றிருக்கிறார்.

நெவார்க் சிட்டியுடனான ஒப்பந்தத்தை வைத்து அமெரிக்காவே தங்களை அங்கீகரித்துவிட்டதாக நித்யானந்தா தரப்பினர் சொல்லிக்கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கையை நியூயார்க் கவுன்சில் எடுத்திருக்கிறதாம்.

இதுபோக, ஈக்வடார் நாட்டில் தனித்தீவை விலைக்கு வாங்கி அந்த தீவைதான் கைலாசா என பெயரிட்டு நித்யானந்தா லைம் லைட்டில் இருந்து வருகிறார் என தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில் இதனை ஈக்வடார் அரசு மறுத்ததோடு, நித்யானந்தா தங்களது நாட்டில் இல்லை என்றும் பிபிசி நிறுவனத்திடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, ஐ.நா தரப்பிலிருந்தும் கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்றது குறித்து பிபிசிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, “பிப்ரவரி 22 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு மற்றும் பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு முறையே இரு விவாத நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

பொது விவாத தலைப்பான இதில் ஆர்வமுள்ள எந்த தன்னார்வலரும் பங்கேற்க முடியும். அதன்படியே கைலாசா பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஐக்கிய நாடுகள் சபை தனி நாட்டுக்கான பிரதிநிதிகள் என்ற நிலையில் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com