முதல் வெற்றியிலேயே பேச வைத்த சுரேஷ் அங்கடி..!

முதல் வெற்றியிலேயே பேச வைத்த சுரேஷ் அங்கடி..!
முதல் வெற்றியிலேயே பேச வைத்த சுரேஷ் அங்கடி..!


ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த சுரேஷ் அங்கடி (65) கடந்த 2 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்றிரவு 8 மணிக்கு அமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானார். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியிலிருந்து சுரேஷ் அங்கடி 4ஆவது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு உயிரிழக்கும் முதல் மத்திய அமைச்சர் மற்றும் நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக டெல்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த போது, கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதியின் முடிவை காங்கிரஸ் கட்சியினரால் நம்ப இயலவில்லை. காரணம் கடந்த தேர்தலில் தங்கள் வசம் இருந்த பெலகாவியை முதல்முதலில் தேர்தலைச் சந்தித்த ஒருவர் கைப்பற்றியுள்ளார் என்று வியந்து போனது கர்நாடக மாநில காங்கிரஸ். அவர்களை திகைக்க வைத்தவர், சுரேஷ் அங்கடி. 1995 ஆம் ஆண்டு பெலகாவி மாவட்டம் கொப்பா கிராமத்தில் லிங்காயத் குடும்பத்தில் பிறந்தவர் சுரேஷ் அங்‌கடி. அதே மாவட்டத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். ஒரு கட்டத்தில் அரசியல் ஆசை வந்துவிட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்புக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் பதவி முதல் மாநில துணைத் தலைவர் வரை தாமாக வந்து சேர்ந்தது.

முதல்முறையாக 2004 ஆம் ஆண்டு பெலகாவி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் அங்கடி, தன்னை எதிர்த்து நின்ற அமர்சிங்கை வெற்றி கொண்டார். அமர்சிங், சுதந்திர போராட்டத் தியாகியும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான வி.எல்.பாட்டீலின் மகன் என்பதால், அங்கடியின் வெற்றி பெரிதும் பேசப்பட்டது. அதன் பின்னர் 2009, 2014, 2019 என தொடர்ந்து 4 முறையும் பெலகாவியில் போட்டியிட்ட சுரேஷ் அங்கடிக்கு, வெற்றியையே கிடைத்தது.

4ஆவது முறை எம்பியானபோது முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அதுவும் ரயில்வே இணை அமைச்சர் பதவி. ரயில்வே இணை அமைச்சராக சீரிய முறையில் பணியாற்றியவர் சுரேஷ் அங்கடி. துறை சார்ந்த‌ தகவல்களை துல்லியமாக எடுத்துரைப்பதில் வல்லவர். தனது சொந்த மாநில தலைநகரான பெங்களூருக்கு புறநகர் ரயில் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி, கர்நாடக மக்களால் நேசிக்கப்பட்டவர் சுரேஷ் அங்கடி என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு முன் வசந்தகுமார், துர்காபிரசாத், அசோக் கஸ்தி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மறைந்த சுரேஷ் அங்கடிக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com