பாஜகவில் சேர்ந்த சில நிமிடங்களிலே நரேஷ் அகர்வால் சர்ச்சை பேச்சு
ஜெயா பச்சன் குறித்த நரேஷ் அகர்வாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வால் நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. பாஜகவில் சேர்ந்தவுடன் நரேஷ் அகர்வால் பேசிய அவரது முதல் பேச்சே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் நடனமாடி பணியாற்றியவர்களுக்காக சமாஜ்வாடி கட்சியில் இருந்து நான் ஒதுக்கப்பேட்டேன் என்று நரேஷ் கூறினார். அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சனை அவர் குறிப்பிட்டு பேசினார்.
சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங்கிற்கும் நரேஷ் அகர்வாலுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே பிரச்னை இருந்து வந்தது. ஆனால் அகிலேஷ் யாதவுடன் சுமூகமான உறவில்தான் இருந்தார். இந்நிலையில்தான், ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சி சார்பில் மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆக தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நரேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஏனெனில், மாநிலங்களவை எம்.பி. ஆக உள்ள நரேஷ் அகர்வாலின் பதவி காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெயா பச்சனை வேட்பாளராக கட்சி அறிவித்து விட்டது. இந்த நிலையில், அவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார்.
ஜெயாபச்சன் குறித்த நரேஷின் கருத்து ஏற்புடையது அல்ல என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். சுஷ்மா தனது ட்விட்டரில், “நரேஷ் அகர்வால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், ஜெயா பச்சன் குறித்த அவரது கருத்து முறையானதும், ஏற்புடையதும் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா தலைவர்களை பல நேரங்களில் நரேஷ் அகர்வால் விமர்சித்துள்ளார். அதற்காக சர்ச்சைக்குள்ளாகியும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.