'Pace like a Fire' - ஸ்டெய்னை துள்ளிக் குதிக்க வைத்த காஷ்மீரின் வேகப்புயல்!

'Pace like a Fire' - ஸ்டெய்னை துள்ளிக் குதிக்க வைத்த காஷ்மீரின் வேகப்புயல்!
'Pace like a Fire' - ஸ்டெய்னை துள்ளிக் குதிக்க வைத்த காஷ்மீரின் வேகப்புயல்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. போட்டியின் முடிவை தாண்டி ஒரு வீரர் அதிகமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். அது உம்ரான் மாலிக். அவர் விக்கெட் எடுத்த போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்டெய்னே துள்ளிக்குதித்து கொண்டாடினார். ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகப்புயல். பல சாதனைகளையும் முறியடித்த அனுபவமிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். அப்படி ஒரு மூத்த வீரர் உம்ரான் மாலிக் மாதிரியான இளம் வீரர் ஒருவரின் வெற்றியை இத்தனை ஆர்வமாக ஏன் கொண்டாட வேண்டும்? உம்ரான் மாலிக்கிடம் அப்படி என்னதான் ஸ்பெசலாக இருக்கிறது?

கடந்த 2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணி ரொம்பவே சுமாராக ஆடியிருந்தது. தொடர் தோல்விகளால் சீக்கிரமே ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பையும் இழந்துவிட்டது. அந்த சூழலில் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வரிசையாக வாய்ப்பளிக்கப்பட்டது. அப்படித்தான் உம்ரான் மாலிக்கிற்கும் சன்ரைசர்ஸ் அணியின் ப்ளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்தது. சன்ரைசர்ஸ் அந்த சீசனில் ஆடிய 12 வது போட்டி அது. கொல்கத்தாவிற்கு எதிராக மோதியிருந்தார்கள். அறிமுக வீரராக களமிறங்கியிருந்த உம்ரான் மாலிக்கிடம் நான்காவது ஓவரை வில்லியம்சன் கொடுக்கிறார். உம்ரான் மாலிக்கும் ஆர்வத்துடன் அந்த ஓவரை வீச தொடங்கினார். அவர் முதல் பந்தை வீசியபோது அவர் வெறுமென ஒரு அறிமுக வீரர் அவ்வளவுதான். அதைத்தாண்டி அவருக்கு வேறு அடையாளம் எதுவும் கிடையாது. யாரும் அவரைப்பற்றி விதந்தோதி பேசுவதற்கும் ஒரு விஷயமும் இல்லை. ஆனால், இந்த நிலையை தான் வீசிய மூன்றாவது பந்திலேயே உம்ரான் மாலிக் மாற்றினார். அந்த பந்தை உம்ரான் வீசி முடித்த பிறகு ரசிகர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் கூடுதலாக விரிந்தது. கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கமெண்டேட்டர்கள் ஒரு நொடி உறைந்தே போயினர். உம்ரான் மாலிக் அப்படி என்னதான் செய்தார்?

அவர் வீசிய வேகம். அதுதான் அத்தனை பேரையும் ஒரு நொடி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. 150+ கி.மீ வேகத்தில் காற்றை கிழித்துக் கொண்டு அவர் வீசிய பந்து மின்னலென பாய்ந்திருந்தது. அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே ஒரு இளம் வீரர் இத்தனை வேகமாக வீசியது மிகபெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. நான்காவது பந்திலிருந்து இந்த மின்னல் வேகமே உம்ரான் மாலிக்கிற்கான ஒரு அடையாளமாக மாறிப்போனது. சராசரியாக ஒவ்வொரு இரண்டு பந்துக்கும் ஒரு 150+ கி.மீ டெலிவரியை வீசி அதகளப்படுத்தினர். இந்திய பௌலர் ஒருவர் இவ்வளவு வேகமாக அதுவும் தொடர்ந்து வீசுவதை பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டதென பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் உம்ரானை புகழ்ந்து தள்ளினர். வக்கார் யூனிஸ் போன்றோருடன் ஒப்பிட்டு பேசினர். இந்திய அணியின் வருங்கால நம்பிக்கையாக ஜொலிப்பார் என பலரும் கணிப்புகளை கூறினர்.

கடந்த சீசனில் உம்ரான் மாலிக் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். ஆனாலும், உம்ரானுக்கு கிடைத்த வரவேற்பையும் அவரின் எனர்ஜியையும் பார்த்து சன்ரைசர்ஸ் அணி அவரை 4 கோடி ரூபாய் கொடுத்து ரீட்டெயின் செய்து கொண்டது.

டேவிட் வார்னரையே சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை, சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை என கேலரியில் உட்காந்து கொடி ஆட்ட வைத்த இதே சன்ரைசர்ஸ்தான் உம்ரான் மாலிக் எனும் இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுத்து அவரை மெருகேற்றி அவர் நன்றாக செட்டில் ஆகும் அளவுக்கான நேரத்தையும் கொடுத்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யமான விஷயம்.

'வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே அந்த வேகம் இருக்க வேண்டும்' என்பது வேகப்பந்து வீச்சுக்காக கூறப்படும் ஒரு அடிப்படையான விஷயம். உம்ரான் மாலிக்கிற்கும் இயல்பிலேயே அந்த வேகம் வாய்க்கப்பெற்றிருக்கிறது. ஆனால், அவருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியதில் சில வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

இர்ஃபான் பதான். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இவர் 2018 ஆம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் மற்றும் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அங்கே காஷ்மீரில் பயிற்சியில் ஈடுபடும்போது அங்கிருக்கும் இளம் வீரர்கள் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யும்பட்சத்தில் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பெர்ஃபார்மென்ஸ்களை வீடியோவாக எடுத்து தன்னுடன் ஆடிய முன்னாள் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை உம்ரான் மாலிக்கின் வேகத்தை கண்டு மிரண்டவர், உம்ரான் மாலிக்கின் வீடியோவை சன்ரைசர்ஸின் பயிற்சியாளர் குழுவில் இருந்த வி.வி.எஸ். லெக்ஷ்மணுக்கு அனுப்பி வைத்தார். அதன் மூலம் ஈர்க்கப்பட்டு சன்ரைசர்ஸ் அணிக்கு வலைப்பயிற்சியில் வீசும் நெட் பௌலராக உம்ரான் மாலிக் அழைக்கப்பட்டார். வலைப்பயிற்சியின் போது ஒரு முறை வார்னருக்கு உம்ரான் மாலிக் பந்து வீசினார். அப்போது அவர் வீசிய ஒரு பந்தை கூட வார்னரால் தொட முடியவில்லை. இந்த சமயத்தில்தான் தமிழக வீரரான நடராஜனுக்கு கொரோனா என்ற செய்தி வெளிவர நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான்தான்.

ஐ.பி.எல் அணிக்குள் வர இர்ஃபான் பதான் எப்படி காரணமாக இருந்தாரோ அதேமாதிரி அவரின் பெர்ஃபார்மென்ஸ் மெருகேற டேல் ஸ்டெய்ன் ஒரு காரணமாக இருக்கிறார். உம்ரான் மாலிக்கிற்காக ஸ்டெய்ன் அவ்வளவு சந்தோஷப்படுவதும் இதனால்தான்.

ஸ்டெய்ன் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன பிறகு மட்டும் உம்ரான் மாலிக்கின் மீது அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. அதற்கு முன்பாகவே ஸ்டெய்னை உம்ரான் மாலிக் ஈர்த்திருந்தார். கடந்த சீசனில் உம்ரான் மாலிக் வீசிய மூன்றாவது பந்து அனைவரையும் ஈர்த்தது என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்த மூன்றாவது பந்தை உம்ரான் மாலிக் வீசிய போது கமெண்ட்ரி பாக்ஸில் கமெண்ட் செய்து கொண்டிருத்தவர் டேல் ஸ்டெய்ன்தான்.

'அவரின் முகத்தை பாருங்கள். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஓவ்வொரு பந்தையும் அனுபவித்து வீசுகிறார். இந்தியாவிலிருந்து அறிமுக போட்டியில் ஆடும் ஒரு பௌலர் 150 கி.மீ வேகத்தில் வீசுவதை பார்ப்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது' என ஸ்டெய்ன் அப்போது பேசியிருந்தார். இப்போது அவர்தான் உம்ரான் மாலிக்கிற்கு பந்துவீச்சு பயிற்சியாளர்.

உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக சொதப்பலாக வீசினாலும் அணியில் தொடர்ந்து இருப்பதற்கு டேல் ஸ்டெய்ன் போன்ற பயிற்சியாளர்களின் நம்பிக்கையை உம்ரான் பெற்றிருப்பதே மிக முக்கிய காரணம். 'உம்ரான் கொஞ்சமாகத்தான் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். அவர் நல்ல வேகத்தில் வீசுகிறார். விக்கெட்டுகள் எடுப்பதற்கான சூட்சமத்தை கற்றுக்கொள்ள அவருக்கு நேரம் பிடிக்கும். அந்த நேரத்தை அவருக்கு கொடுங்கள். இந்த சீசன் முழுவதும் அவர் சொதப்பினாலும் பரவாயில்லை. அடுத்த சீசனில் பெரும் அனுபவத்தோடு அணிக்கு தேவையானதை செய்து கொடுப்பார்' கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய போட்டியின் போது இயான் பிஷப் இப்படி கூறியிருந்தார். 'வருங்காலத்திற்கான வீரர்' என்கிற பிஷப்பின் கூற்றை சன்ரைசர்ஸ் அணியுமே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் எவ்வளவு மோசமாக வீசினாலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்குகிறார்கள்.

'அவருக்கு எந்தவிதமான சிக்கலான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. அவரின் கேம்ப்ளான் ரொம்பவே சாதாரணமாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அவர் விருப்பப்படியே நேராக விரும்பிய வேகத்தில் வீசட்டும்' என உம்ரான் மாலிக் குறித்த கேள்வி ஒன்றிற்கு டேல் ஸ்டெய்ன் பதில் கூறியிருப்பார். கூறியதை போன்றே அதிக அழுத்தமிக்க பவர்ப்ளே மற்றும் டெத் இரண்டிலுமே ஓவர் கொடுக்காமல் 7-16 இந்த மிடில் ஓவர்களுக்குள்ளேயே உம்ரானின் ஸ்பெல்லை முடித்துவிடுகின்றனர். இந்த ஓவர்களில் அவர் எப்படி வீசினாலும் சரி, தவறு செய்து பழகிக்கொள்ளட்டும் என்கிற எண்ணத்திலேயே சன்ரைசர்ஸ் இருக்கிறது.

இந்த அணுகுமுறை நல்ல ரிசல்ட்டையும் கொடுக்க தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் உம்ரான் மாலிக்கின் செயல்பாடுகள் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கொயருக்கு பின்னாலயே 5 வீரர்களை வைத்து ஷார்ட் பாலுக்கு செட் செய்துவிட்டு ஒரு வெறித்தனமான யார்க்கரை வீசி ஸ்ரேயாஸை போல்ட் ஆக்கியிருப்பார். இந்த யார்க்கரை பெவிலியனில் உட்காந்திருந்த ஸ்டெய்னே கணித்திருக்கவில்லை. 'இந்த சமயத்தில் யார்க்கர் வீசினால் நன்றாக இருக்கும்' என முரளிதரன் சொல்லவே, 'அப்படி யார்க்கர் வீசினால் உம்ரானின் தலைக்கு மேல் ஸ்ரேயாஸ் அடிப்பார்' என ஸ்டெய்ன் கூறியிருக்கிறார். ஆனால், உம்ரான் யார்க்கர்தான் வீசினார். ஸ்ரேயாஸின் விக்கெட்டையும் தூக்கினார். அதன்பிறகு, அபாயகரமான ரஸல் ஸ்ட்ரைக்கில் இருந்த போது ஒரு ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 5 டாட்களை ரஸலுக்கு வீசி அசரடித்தார். ஷார்ட் பிட்ச், ஒய்ட் டெலிவரிக்கள், யார்க்கர்கள் என விதவிதமாக அதேநேரத்தில் துல்லியமாக வீசினார். ரஸலை க்ரீஸில் வைத்துவிட்டு 5 டாட்கள் என்பது நிஜமாகவே ஒரு தரமான சம்பவம்தான்.

'Pace like a Fire' இவர் நெருப்பு மாதிரி வீசுகிறார் என கவாஸ்கர் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

'எல்லாவற்றையுமே உம்ரானே பார்த்துக்கொள்கிறார் என நீங்கள் தன்னடக்கமாக கூறலாம். ஆனால், உங்களை போன்ற ஒரு குரு அருகில் இருப்பதே அவரை ஊக்கப்படுத்தும். உங்களை ஈர்ப்பதற்காகவே அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். அவரின் தோளில் நீங்கள் தட்டிக்கொடுப்பதே பெரிய பரிசுதான்' என ஸ்டெய்னை நோக்கி கவாஸ்கர் புகழ,

'ஆலன் டொனால்டு போன்ற சீனியர்கள் தென்னாப்பிரிக்க அணியில் எனக்கு செய்த அந்த விஷயத்தைத்தான் நான் இங்கே உம்ரான் மாலிக்கிற்கு செய்கிறேன்' என ஸ்டெய்ன் கூறியிருக்கிறார். உம்ரான் மாலிக் ஆசிர்வதிக்கப்பட்டவர். சர்வதேச கிரிக்கெட்டில் 600+ விக்கெட்டுகளை எடுத்து பேட்ஸ்மேன்களை திணறடித்த கைகள் அவரின் தோளை தட்டிக்கொடுக்க தயாராக இருக்கிறதே!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com