சம்பவங்கள் ஐந்து - உம்ரான் மாலிக்கும் புயல் வேகமும்!

சம்பவங்கள் ஐந்து - உம்ரான் மாலிக்கும் புயல் வேகமும்!
சம்பவங்கள் ஐந்து - உம்ரான் மாலிக்கும் புயல் வேகமும்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தோற்றபோதும் சன்ரைசர்ஸ் அணியின் உம்ரான் மாலிக்தான் பேசுபொருளாக மாறியிருக்கிறார். இணையம் முழுவதும் உம்ரான் மாலிக்கின் வீடியோக்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. அந்தளவுக்கு தரமான சம்பவத்தை உம்ரான் மாலிக் நேற்று நிகழ்த்தியிருந்தார். 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சீசனில் ஒரு பந்துவீச்சாளரின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான். உம்ரான் இந்த போட்டியில் மட்டுமில்லை. இதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றிலேயே சிலபல தரமான சம்பவங்களை செய்திருந்தார். அவற்றை பற்றிய ஒரு அலசல் இங்கே..

சம்பவம் 1 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி அது. முக்கியமான கட்டத்தில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். உம்ரான் மாலிக் அந்த ஓவரை வீசுகிறார். ஸ்ரேயாஸுக்கு ஷார்ட் பாலுக்கான ஃபீல்ட் செட்டப் வைக்கப்படுகிறது. வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டிய 5 ஃபீல்டர்களும் ஸ்கொயருக்கு பின்னால் மட்டுமே நிற்க வைக்கப்பட்டிருந்தனர். இதை பார்த்து ஸ்ரேயாஸும் ஷார்ட் பாலுக்காக தயாராகினார்.

அவர் எதிர்பார்த்ததை போலவே நல்ல வைடாக ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரி வந்தது. ஸ்ரேயாஸால் அதை அடிக்க முடியவில்லை. அவர் பீட்டன் ஆனார். அடுத்த பந்து, இப்போதும் 5 ஃபீல்டர்களும் அங்கேயேத்தான் நிற்கின்றனர். பெவிலியனிலிருந்து மேட்ச்சை பார்த்துக்கொண்டிருந்த வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்கள் டேல் ஸ்டெய்னும் - முரளிதரனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த பந்தை யார்க்கராக வீசுவார் என தோன்றுகிறது' என முரளிதரன் கூறுகிறார். வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்டெய்னோ 'யார்க்கர் வீச வாய்ப்பே இல்லை. அப்படி யார்க்கர் வீசினால் ஸ்ரேயாஸ் அந்த பந்தை பௌலரின் தலைக்கு மேல் பறக்கவிடுவார்' என கூறுகிறார். ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கில் தயாராக இருக்கிறார். உம்ரான் மாலிக் ஓடி வருகிறார். அதே ஃபீல்ட் செட்டப் அப்படியே இருக்கிறது. ஷார்ட் பாலா....யார்க்கரா...யார்க்கரா...ஷார்ட் பாலா? உம்ரானின் கையிலிருந்து பந்து ரிலீஸ் ஆகிறது. 150+ கி.மீ வேகத்தில் யார்க்கர் விழுகிறது. ஸ்டெய்ன் சொன்னதை போல ஸ்ரேயாஸ் அதை பௌலரின் தலைக்கு மேலேயே அடித்துவிட்டாரா? இல்லவே இல்லை. ஸ்ரேயாஸ் அந்த பந்தை தொடக்கூட முடியவில்லை.

சீறிக்கொண்டு வந்த பந்து ஸ்டம்புகளை சிதறடித்தது. ஒட்டுமொத்த மைதானமும் ஆராவாரத்தில் அதிர்ந்தது. தான் கணித்த விஷயம் தவறான போதும் ஸ்டெய்ன் துள்ளிக்குதித்தார். இந்த சீசனில் உம்ரான் மாலிக் நிகழ்த்திக்காட்டிய முதல் மிரட்டலான சம்பவம் இதுதான்.

சம்பவம் 2

கொல்கத்தாவிற்கு எதிரான அதே போட்டியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தது. இப்போது உம்ரான் மாலிக்கின் எதிர்திசையில் ஸ்ரேயாஸை விட இன்னும் அபாயமான ஆண்ட்ரே ரஸல் நிற்கிறார். டி20க்களில் சிக்சர் அடிப்பதற்கும் போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதற்குமே பிறவியெடுத்து வந்தவர் ரஸல். அவர் ஸ்ட்ரைக்கில் இருக்கும்போது உம்ரான் மாலிக் கைக்கு மீண்டும் பந்து செல்கிறது. இவர்தான் ஐந்தாவது பௌலர் என்பதால் இவரை அடித்து வெளுக்க ரஸல் தயாராகிறார். குறைந்தபட்சம் ஒரு 20 ரன்களையாவது இந்த ஓவரில் அடித்துவிட வேண்டும் என்பதே ரஸலின் எண்ணம். ஆனால், நடந்ததோ வேறு. இந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே வந்தது. உம்ரான் மாலிக் வீசிய 6 பந்துகளில் ஒரே ஒரு பந்தில் மட்டுமே ரஸலால் ஸ்கோர் செய்யவே முடிந்தது. அதுவும் ஓடிதான் ரன் எடுக்க முடிந்தது. மற்ற 5 பந்துகளுமே டாட். உம்ரான் மாலிக் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை எதிர்கொள்ள முடியாமல் ரஸல் க்ரீஸுக்குள் தட்டுதடுமாறினார். ஆஜானுபாகுவாக ஒற்றை ஆளாக மைதானத்தை தாண்டி சிக்சர்களை பறக்கவிடும் ரஸலுக்கு இந்த ஓவரில் பேட்டில் பந்து படுவதே பெரிய சாதனையாக தெரிந்தது. ஒரே போட்டியில் உம்ரான் மாலிக் இரண்டாவது முறையாக அத்தனை பேரின் புருவங்களையும் உயர வைத்தார்.

சம்பவம் 3

பஞ்சாபிற்கு எதிரான அந்த போட்டியின் கடைசி மற்றும் 20 வது ஓவர் அது. அத்தனை சக்திகளையும் திரட்டி முழுபலத்தோடு ஓங்கி அடிக்க பஞ்சாப் பேட்டர்கள் தயாராக இருந்தனர். இத்தனை போட்டிகளாக உம்ரான் மாலிக்கை பவர்ப்ளேயிலும் டெத்திலும் வீச வைக்காமல் கொஞ்சம் பாதுகாப்பான மிடில் ஓவர்களிலேயே வில்லியம்சன் வீச வைத்திருப்பார். ஆனால், இந்த போட்டியில் முதன் முதலாக இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது. டெத் ஓவர்களில் உம்ரானின் வேகமே அவருக்கு வினையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். ஸ்ரேயாஸை போல, ரஸலை போல பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் ஏமாந்து போயினர். அந்த ஒரே ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. ஒரு ரன் கூட கொடுக்கப்படவில்லை. அந்த ஓவர் முழுவதுமாக மெய்டன் ஆனது.

சம்பவம் 4

குஜராத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில்தான் இது நடந்திருந்தது. 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சீசனின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இது. 196 ரன்களை சேஸ் செய்த போது குஜராத் அணி ஒரு கட்டத்தில் ரொம்பவே வலுவாக இருந்தது. 7 ஓவர்களில் விக்கெட்டே விடாமல் 68 ரன்களை சேர்த்திருந்தது. போட்டி குஜராத் பக்கமே இருந்தது. இந்த சமயத்தில்தான் 8 வது ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். நன்றாக செட்டில் ஆகியிருந்த சுப்மன் கில்லை ஸ்டம்புகள் தெறிக்க வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் அரைசதம் கடந்திருந்த சஹாவுக்கு 153 கி.மீ வேகத்தில் ஒரு யார்க்கரை வீசி போல்டாக்கினார். ஹர்திக் பாண்ட்யாவை திமிறி எழுந்த ஒரு ஷார்ட் பாலில் வீழ்த்தினார். கடைசியாக வீசிய நான்காவது ஓவரில் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் இருவரையும் வீழ்த்தி 5 விக்கெட் ஹால் எடுத்தார். மேலும், குஜராத் அணியின் முதல் 5 விக்கெட்டுகளையுமே உம்ரான் தான் வீழ்த்தியிருந்தார். குஜராத் பக்கமாக சாய்ந்து கொண்டிருந்த போட்டி சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பியது. உம்ரான் மாலிக் ஏற்படுத்திய தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் கடைசிக்கட்டத்தில் சன்ரைசர்ஸ் சொதப்பி தோற்றது.

சம்பவம் 5

குஜராத் Vs சன்ரைசர்ஸ் போட்டிக்குள் மேலும் ஒரு போட்டியாக ஹர்திக் பாண்ட்யா Vs உம்ரான் மாலிக் எனும் போட்டி நடந்திருந்தது. நேற்று உம்ரான் மாலிக்கின் பந்திலேயே ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆகியிருந்தார். இதை ஒரு இயல்பான டிஸ்மிசலாக பார்க்க முடியாது. ஹர்திக் பாண்ட்யாவின் ஈகோ சுரண்டப்பட்டதன் விளைவுதான் இந்த விக்கெட். ஹர்திக் க்ரீஸுக்குள் வந்த முதல் பந்திலேயே, 145 கி.மீ வேகத்தில் ஒரு ஷார்ட் பாலை ஹர்த்திக்கின் தோளில் மோத செய்து வெறித்தனம் காட்டியிருந்தார் உம்ரான்.

மைதானத்திற்குள் ஓடி வந்த ஃபிசியோவை 'ஒன்றுமில்லை. செல்லுங்கள்' எனக்கூறி அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்திருந்தார் ஹர்திக் பாண்ட்யா. இத்தோடு அந்த ஓவர் முடிந்தது. அடுத்த ஓவருக்கு உம்ரான் மாலிக், மீண்டும் வந்த போது ஸ்ட்ரைக்கில் ஹர்திக் தான் இருந்தார். முதல் பந்தையே ரிஸ்க் எடுத்து மிட் ஆனில் பவுண்டரி ஆக்கியிருந்தார். அதுவே கேட்ச் ஆவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உடைய ஷாட் தான். இத்தோடு அமைதியாக இருந்திருக்கலாம். அடுத்த பந்தையே அது ஒரு ஷார்ட் பால் அதை தூக்கி அடித்து டீப் தேர்டு மேனிடம் கேட்ச் ஆகி ஹர்திக் வெளியேறியிருந்தார்.

முதல் பந்தில் ஹர்திக்கின் தோளில் உம்ரான் ஒரு ஷார்ட் பாலை இறக்கினார் இல்லையா? அந்த அடிக்கு பதிலடி கொடுக்கிறேன் என மானாவாரியாக அடித்து ஹர்திக் அவுட் ஆகியிருந்தார். ஈகோ பார்க்காமல் சூழலை உணர்ந்து பொறுமை காத்திருந்தால் விக்கெட்டை விட்டிருக்கமாட்டார். சரி, இதை எப்படி ஹர்திக் Vs உம்ரான் மாலிக் ஈகோ மோதலின் விளைவு என உறுதியாக கூற முடியும்? இதே மாதிரியான சம்பவம், இந்த சீசனிலேயே இதற்கு முன் இரண்டு அணிகளும் மோதிய முதல் போட்டியிலும் அரங்கேறியிருந்தது. அதிலும் ஹர்திக்கின் ஹெல்மட்டிலேயே ஒரு வெறித்தனமான ஷார்ட் பாலை உம்ரான் இறக்கியிருப்பார்.

அப்போதும் உள்ளே ஓடி வந்த ஃபிசியோவிடம் ஒன்றுமில்லை என்பது போல ஹர்திக் சைகை காட்டி ஒப்புக்கு அவர்களை பார்க்கவிட்டு அனுப்பிவிட்டிருப்பார். உம்ரான் வீசிய அடுத்த இரண்டு பந்துகளிலும் ஹர்திக் வெறித்தனமாக பவுண்டரி அடித்திருப்பார். போட்டி முடிந்த பிறகு உம்ரான் மாலிக் வீசிய அந்த ஓவரை பற்றி ஹர்திக்கிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் அதற்கு 'என்னுடைய கடினத்தன்மையை அங்கே வெளிக்காட்ட விரும்பினேன். அந்த பவுன்சர் என்னை தூண்டிவிட்டது.' என பேசியிருப்பார்.

ஒரு பேட்ஸ்மேனுக்கும் பௌலருக்கும் இடையிலான இதுபோன்ற ஈகோ யுத்தங்கள் ஆட்டத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தையே அளிக்கும். கடந்த போட்டியில் வீசியதை போன்ற ஒரு ஷார்ட் பாலை வீசி ஹர்திக்கே சீண்டியே ஆக வேண்டும் என உம்ரான் மாலிக் முதல் பந்தை அப்படி வீசினாரா என தெரியவில்லை. ஆனாலும் ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்ஸ்மேனின் ஈகோவை சுரண்டி அவருடன் மோதி விக்கெட்டை வீழ்த்திய இந்த 'அக்ரசன்' ரொம்பவே அழகாக இருந்தது.

ஹர்திக் பாண்ட்யா கொஞ்சம் உணர்ச்சிவசத்தை அடக்கியிருக்கலாம்! ஷார்ட் பாலுக்கான 'ட்ராப்' ( Trap) இருக்கிறதென தெரிந்தும் இரையை தேடி கூண்டுக்குள் சென்று சிக்கிக்கொள்ளும் எலியாக மாட்டியிருந்தார்.

முதல் ஒரு சில போட்டிகளில் உம்ரான் மாலிக் அவ்வளவு சிறப்பாக வீசியிருக்கவில்லை. ஆனாலும், வேகமாக வீசும் டெலிவரிகளுக்கு தனியாக ஒரு அவார்ட் கொடுப்பதால் எல்லா போட்டியிலும் அந்த 1 லட்ச ரூபாய் உம்ரான் மாலிக்கிற்கே கிடைக்கும். இது கொஞ்சம் நகைப்புக்குரியதாக பார்க்கப்பட்டது. 4 ஓவர்களில் 45 ரன்களை கொடுத்துவிட்டு ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஒரு லட்ச ரூபாயை அள்ளிக்கொண்டு சென்றது கிண்டலாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது குஜராத்திற்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் தோற்ற பிறகும் தோற்ற அணியை சேர்ந்த உம்ரானுக்கே Man of the Match விருது வழங்கப்பட்டது. இந்த சீசனில் முதல் முறையாக இப்படி தோற்ற அணியின் வீரர் ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. உம்ரானின் வளர்ச்சியை இந்த விருதுகளை வைத்தே அளவிட்டு கொள்ளலாம்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com