“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை

“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை
“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை

மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை, கர்நாடகா முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றையும், அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் குமாரசாமி அளித்துள்ளார். அதில், மேகதாது அணை திட்டம் நிறைவேறாததால், கர்நாடகவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

காவிரியின் குறுக்கே எந்த இடத்திலேயும் அணை கட்ட கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இவ்விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த வகையிலும் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேகதாது அணை தொடர்பாக தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளதை ஏற்க முடியாது என்றும், அணையை கட்ட தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் கர்நாட‌காவுக்கு இல்லை என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க, மேகதாது அணை திட்டத்துக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கர்நாடக முதல்வரை தொடர்ந்து நீர்வளத்துறை துறை அமைச்சரை தமிழக முத‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, காவிரியில் அணை கட்ட வேண்டுமென்றால் தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதை எடுத்துக் கூறிய முதலமைச்சர், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கினால், அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும் என்று தெரிவித்தார். மேலும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் குமாரசாமி சந்தித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com