"தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர்!" - உதயநிதி ஸ்டாலின் சாடல்

"தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர்!" - உதயநிதி ஸ்டாலின் சாடல்

"தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர்!" - உதயநிதி ஸ்டாலின் சாடல்
Published on

"தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர்" என்று அதிமுகவை கடுமையாக சாடினார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில் போட்டியிடும் முருகன் மற்றும் பிராகஷ் ஆகியோரை ஆதரித்து சூளகிரி, பேரிகை, பாகலூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியது:

"நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மோடியின் அடிமை அதிமுகவை ஓட ஓட விரட்டி அடித்துள்ளோம். அதை பாஜக, அதிமுகவினர் மறக்கவில்லை. அதனால்தான் மோடிக்கு நம் மீது வெறுப்பு.

நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் பாஜகவிற்கு முட்டைதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் சொந்த பணம் எடுக்கப் போனதில் பலர் இறந்தனர். மோடி சொன்ன புதிய இந்தியாவை நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். 500, 1000 ரூபாய் போல அதிமுக, பாஜகவை செல்லாக்காசாக்க வேண்டும். ரூ.15,000 கோடி ஜிஎஸ்டி பணத்தை தர முடியாது என்றவர், ரூ.8000 கோடி ரூபாயில் சொகுசு விமானத்தை வாங்கினார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.10,000 கோடியில் கட்டுகிறார் மோடி. அது என்ன அவர் அப்பா வீட்டு பணமா?

புயல் நிவாரணம் கேட்டபோது, மத்திய அரசு கொடுத்தது ரூ.500 கோடி மட்டுமே. இதை தமிழக முதல்வர்தான் கேட்க வேண்டும். மோடி முட்டி போட சொன்னாலும், குட்டிக்கரணம் அடிக்க சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி செய்வார். அடிமை அதிமுக, பாசிச பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர். விட்டால், நாட்டையே விற்று விடுவார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். புதிய கல்விக் கொள்கையால் 3 மற்றும் 5-ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்தியாவிலேயே மோடியை எதிர்ப்பது ஸ்டாலின் மட்டுமே. தேர்தலில் அதிமுக சி.ஏ.ஏ., என்.ஆர்.சி வேண்டாம் என திரித்து பேசுகிறது.

இரட்டை இலைக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்குதான். அவர்கள் வென்றால் கூவத்தூருக்கோ, பாஜகவிற்கோ ஓடி விடுவார்கள் என்பதை உணர்ந்து திமுகவை ஆதரிக்க வேண்டும்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com