பாதுகாப்புத் துறை அமைச்சராக மனோகர் பரிக்கர் தோற்றுப் போனவர் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாகச் சாடியிருக்கிறார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பனாஜி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோற்றால் மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சராக வருவேன் என்று மனோகர் பரிக்கர் கூறியிருப்பதை விமர்சித்துள்ளார்.
இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் கோவா முதலமைச்சர் பதவியை மட்டுமின்றி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியையும் பரிக்கர் இழிவுபடுத்திவிட்டதாக தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
பனாஜி இடைத்தேர்தலில் மனோகர் பரிக்கர் தோற்க வேண்டும் என்றும், அவர் எவ்வாறு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சராகிறார் என்பதை நாடு பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
பனாஜி தொகுதியில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மனோகர் பரிக்கர், அதில் வென்றால்தான் கோவா முதலமைச்சராக தொடர்ந்து நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.