வேட்புமனுவில் தன்னை முன் மொழிந்த தீபக், சுமதி ஆகியோரை காணவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்பு மனுவை ஆர்.கே.நகரில் வசிக்கும் 10 பேர் முன்மொழிந்திருந்தனர். வேட்பமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்களில் 2 பேர், நாங்கள் விஷாலை முன்மொழியவில்லை, போலியாக எங்களது கையெழுத்து போடப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி தெரிவித்தனர். இதனால் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, விஷால் வேட்புமனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும், மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கம் அளிக்கும்பட்சத்தில் மனு மீது மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேட்புமனுவில் தன்னை முன் மொழிந்த தீபக், சுமதி ஆகியோரை காணவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபக், சுமதி ஆகியோரின் பாதுகாப்பு மிக முக்கியம். எனவே அவர்கள் இருவர் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என தெரிவித்தார்.