முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அணிகளிடமும் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்சிக்கொடி, சின்னம், தலைமை அலுவலகம் ஆகியவை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரமாணப் பத்திரங்கள், எம்.பி.க்கள்., எம்எல்ஏக்களின் ஆதரவு அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் நடைபெற்ற வழக்கில், தற்போது முதலமைச்சர் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளதால் அதனை ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினரின் ஏராளமான தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலையில் இருந்தே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்த நிலையில், முதலமைச்சர் பழனிசாமி - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது" என்றும் கூறினார். பின்னர்தான் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது தெரியவந்தது. பத்திரிகையாளர்கள் கூறியதன் அடிப்படையிலேயே தான் கருத்துத் தெரிவித்ததாக முதலமைச்சர் தரப்பில் மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டது. கட்கரியுடனான கூட்டத்தில் இருந்ததால் ஆணை வெளியிடப்பட்டதா என தெரியவில்லை என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.