இரட்டை இலை விசாரணை: 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை விசாரணை: 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை விசாரணை: 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான விசாரணை, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர். வாதத்தின் போது, கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய தினகரன் தரப்புக்கு அவகாசம் அளிக்கக்கூடாது என வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறினார். அப்போது சசிகலா குற்றவாளியாகவும், தினகரன் வழக்கை சந்திப்பவராகவும் உள்ளனர் என்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் கூறினர். சசிகலா சிறைக்கு செல்லவிருந்த சூழலில் அதிகாரத்தைக் கைப்பற்ற தினகரன் அவசரமாக துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவரின் நிய‌மனம் செல்லாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் 116 சட்டமன்ற உறுப்பினர்கள், 42 எம்.பி.க்கள் மற்றும் 2,182 பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கே ஆதரவு அளிக்கின்றனர் என்றும் ஈபிஎஸ்-ஒபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

தினகரன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் விஜய் ‌ஹன்சாரியா, எதிரணியினர் தாக்கல் செய்த ஆவணங்கள் கட்டாயப்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவித்தார். அத்துடன் கூடுதல் ஆவணங்கள் வழங்க அவகாசம் வேண்டும் என்றும் தினகரன் தரப்பு கோரியது. இவ்வாறாக 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது. இன்று நடைபெற்ற விசாரணையை தீபா பேரவை பிரதிநிதிகள் புறக்கணித்து வெளியேறினர். முன்னதாக இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதற்கான விசாரணையை தேர்தல் ஆணையம்  நடத்த தடையில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தினகரன் கோரிக்கையை நிராகரித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com