கேரள தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் 'ட்வென்டி 20' - பின்புலம் என்ன?

கேரள தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் 'ட்வென்டி 20' - பின்புலம் என்ன?
கேரள தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் 'ட்வென்டி 20' - பின்புலம் என்ன?

கேரள சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களமிறங்கியிருக்கும் Twenty - 20 அமைப்பு, அம்மாநில அரசியல் கட்சிகளை சற்றே கலக்கம் அடையச் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்திருக்கும் ட்வென்டி 20 அமைப்பின் பின்னணியைப் தெரிந்துகொள்வோம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சாபு M.ஜேக்கப், தனது சொந்த ஊரான கிழக்கம்பலம் பகுதியில், பொதுமக்களுக்காக பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். அரசியல் கட்சியினரின் தொடர் எதிர்ப்பால், வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் தவித்த அவர், அரசியலில் இறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே மக்கள்பணி ஆற்ற முடியும் எனும் முடிவுக்கு வந்தார். உடனே, தான் வசிக்கும் பகுதியான கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை திரட்டி Twenty 20 என்ற அமைப்பை உருவாக்கினார்.

2015-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் மட்டும் 19 இடங்களில் போட்டியிட்ட 20-20 அமைப்பு, 17 இடங்களில் அமோக வெற்றி பெற்று பஞ்சாயத்து ஆட்சியை கைப்பற்றியது. அதிகாரம் கைக்கு வந்தது முதல், அந்த பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் சூப்பர் மார்கெட் அமைத்தது, தரமான தார் சாலைகள் அமைத்து கிராமங்களை அழகுபடுத்தியது, தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்தது, கோல்டன் வில்லா என்ற பெயரில் வீடுகள் கட்டி ஏழை குடும்பங்களுக்கு வழங்கியது, என வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

இவ்வளவு செய்தும், ஐந்து ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்து 2020ஆம் ஆண்டு அடுத்த உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தபோது, கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் பலகோடி ரூபாய் மீதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் கவனித்த அக்கம்பக்கத்து பஞ்சாயத்து மக்கள், தங்கள் பகுதிகளிலும் 20 - 20 அமைப்பினர் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், கிழக்கம்பலம் பஞ்சாயத்தோடு சேர்த்து ஐக்கர நாடு, குன்னத்து நாடு, மழவன்னூர், வெங்கோலி என கூடுதலாக நான்கு பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்தி, ஐந்து பஞ்சாயத்துகளிலும் அமோக வெற்றி பெற்றது 20-20 அமைப்பு.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், எர்ணாகுளம் மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி இடுவதாக 20-20 அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநிவாசன், இயக்குனர் சித்திக், உள்ளிட்ட திரைப்பிரமுகர்களும், தொழிலதிபர்கள் சிலரும் இந்த அமைப்பில் இணைந்துள்ள நிலையில், முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

20-20 அமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், கேரள அரசியலில் அது மாபெரும் திருப்பமாக இருக்கும். மற்ற அரசியல் கட்சிகள், தங்களது திட்டங்களை மாற்றி அரசியல் நடத்த வேண்டிய நிலை உருவாக வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com