தூத்துக்குடியில் தந்தை - மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம் - 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணையின்போது உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருப்பது தண்டனை அல்ல என திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருந்தார். மேலும், இந்த சம்பவம் காவல்துறை நிகழ்த்தியிருக்கும் வன்முறை என்பதை தெளிவாக காட்டுவதாகவும், அவர்கள் இருவரை உடனே பணியிடை நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் அவர் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 உதவி ஆய்வாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் 2 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கன்னியாகுமர் எம்பி வசந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் உரிய நிவாரண நிதி வழங்கவேண்டும் எனவும், நீதிதுறை நடுவர் முன்பு உடற்கூராய்வு செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

