“மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை” - டிடிவி தினகரன் எச்சரிக்கை
தொடர்ந்து பொய் தகவலை பரப்பினால் ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவும் அமமுகவும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது. அதற்கு அவசியமும் இல்லை என்று மிக நாகரிகமாக மறுப்பு தெரிவித்தேன்.
அதை ஆதீனம் புரிந்து கொள்ளாமல் மீண்டும் அதே பொய் கருத்துக்களை சொல்லியிருப்பதை பார்த்தால் யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார் போல” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் சொல்வது போல இணைப்பு பேச்சுவார்த்தை நடப்பது உண்மையானால் அதை செய்வது யார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே எனத் தெரிவித்துள்ளார்.