“என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார்” - டிடிவி தினகரன் 

“என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார்” - டிடிவி தினகரன் 
“என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார்” - டிடிவி தினகரன் 

அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதி யில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்தும் களம் கண்டார். 

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தங்க தமிழ்செல்வனிடம் புதிய தலைமுறை கருத்து கேட்டபோது, ‘’கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிபண்ணுங்கள் என்று சொன்னேன். அதைக் கண்டிக்காமல், சமூக வலைத்தளங்களில் தவறானச் செய்தியை வெளியிடும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது தானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? இதற்கு மேல் இதுபற்றி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார். 

இதுகுறிகுறித்து டிடிவி தினகரன் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. தங்க தமிழ்செல்வனை ஊடகங்களில் சரியாக பேசும்படி கூறினேன். சரியாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்க வேண்டி வரும் என கூறினேன். அவர் விஸ்வரூபம்லாம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார். இனி தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க முடியாது. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.

அவர் வாய்க்கு வந்தது எல்லாம் பேசிக் கொண்டிருப்பார். யாரோ சொல்வதை கேட்டு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். எனக்கு அறிவுரை சொல்ல தங்க தமிழ்செல்வன் யார்? எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்க தமிழ்செல்வனுக்கு வாடிக்கை. என்னிடம் நேரடியாக எதுவும் கூறாமல் பேட்டி கொடுப்பார். பின்னர் வந்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். தேனியில் தங்க தமிழ்செல்வன் ஜெயிக்க முடியாது என எனக்கு தெரியும். மதுரை அல்லது திண்டுக்கல்லில் அவரை நிற்கச் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்து அவரின் பதவியை காலி செய்து விட்டன. 

18 எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும்? திமுக கொண்டுவந்துள்ள சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன். ” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com