இரட்டை இலை... குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அணிகளிடமும் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக தங்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கையில் வைத்துள்ளதாகவும் கூறினார். தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடும் போது, வெற்றி பெறுவேன் என்ற அச்சத்திலேயே தேர்தலை ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கும் மத்திய அரசுதான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
முன்னர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வந்த மத்திய அரசு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதனால்தான் மைத்ரேயன் போன்றவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டார். மேலும் பன்னீர்செல்வத்தின் நிலை என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இரட்டை இலை சின்னம் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக ஆகிவிட்டது என்று விமர்சித்தார். ஆனால் இந்த விவகாரத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையமே கூறியிருப்பது, அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் தெரிவிப்போம் என்றும் கூறினார். அத்துடன் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருப்பதாக தினகரன் தெரிவித்தார். சசிகலா முடிவுசெய்தால் மீண்டும் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.