அதிமுக ஆட்சி 2 மாதம் கூட நடைபெறாது: டிடிவி தினகரன்
தற்போது உள்ள ஆட்சி 2 மாதம் கூட நடைபெறாது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான சென்னை ராணி மேரி கல்லூரிக்கு வந்த டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தற்போது இருக்கின்ற மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அச்சாரமாக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். மதுசூதனனுக்கு கூட்டணியாக ஆளும்கட்சி, மத்திய அரசு, தேர்தல் ஆணையம், குறிப்பாக பூத் ஏஜெண்டுகளாக காவல்துறையினர் உள்ளிட்டோர் பணியாற்றினர். இன்று கூட எங்கள் ஆதரவாளர்களை மதுசூதனின் ஆட்கள் அடித்துள்ளனர். இன்னும் 2 மாதம் கூட நடைபெறாத இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு ஏன் அவர்கள் இப்படி நடந்துகொள்கின்றனர் என தெரியவில்லை. காவல்துறையினர் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. இரட்டை இலைச் சின்னம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கையில் இருக்கும் போது தான் வெற்றிச்சின்னம். தற்போது அது எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வில்லன்கள் கையில் அது உள்ளது. பின்னர் எப்படி அதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆர்.கே நகர் என்பது ஜெயலலிதா விட்டுச்சென்ற தொகுதி, எனவே அந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் தொடர்வேன்.
காவல்துறையின் செயல்பாடு கீழ்த்தரமாக உள்ளது. காவல்துறையினர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆர்.கே நகரில் 58 பேரும் டெபாசிட் இழப்பார்கள் நினைத்தேன். ஆனால் ஆளும்கட்சி என்பதால் ஒருவர் மட்டும் பிழைத்துவிட்டார். குக்கர் இரும்புக் கடைக்கு செல்லும் எனக்கூறியவர்களை எல்லாம் தற்போது காணவில்லை. எனக்கு டெபாசிட் கிடைக்காது எனக்கூறியவர்கள் காசிமேடு பகுதிக்கு சென்றால் அவர்களின் வேட்டியை மக்கள் உருவி விடுவாரகள். எங்கள் கட்சியை பொருத்தவரையில் நான் சுயமாக எந்த முடிவையும் எடுக்கமாட்டேன். பொதுச்செயலாளர் சசிகலாவிடமும், மூத்த உறுப்பினர்களிடமும் ஆலோசித்து தான் முடிவெடுப்பேன்” என்று கூறினார்.