மேலூரை தொடர்ந்து சென்னையில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டம்
மேலூரை தொடர்ந்து சென்னையில் வருகிற 23-ந்தேதி டி.டி.வி.தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அவர் மதுரை மேலூரில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் வருகிற 23-ந்தேதி தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 29-ந்தேதி பெரியகுளத்தில் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவலை தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளருமான புகழேந்தி மதுரையில் இன்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெரிய குளத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு தினகரன் ஆதரவாளர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், மதுரை மேலூரில் திரண்டு வந்த கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல என்றும் கூறினார்.

