"வெற்றி நடை போடவில்லை... தமிழகம் தத்தளிக்கிறது!" - டிடிவி தினகரன்

"வெற்றி நடை போடவில்லை... தமிழகம் தத்தளிக்கிறது!" - டிடிவி தினகரன்

"வெற்றி நடை போடவில்லை... தமிழகம் தத்தளிக்கிறது!" - டிடிவி தினகரன்
Published on

"தமிழகம் வெற்றிநடை போடவில்லை... கடன் சுமையில் தமிழ்நாடு தத்தளிக்கிறது" என்றார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். மேலும், "திமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் வட்ட செயலாளர்கள்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருப்பார்கள்" என்று அவர் விமர்சித்தார்.

பொன்னேரி மற்றும் மாதவரம் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த டிடிவி தினகரன் பேசியது:

"அமமுக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணியை கைநீட்டி யாராலும் குற்றம் சுமத்த முடியாது. தமிழக வாக்காளர்களை 2000 ரூபாய், 3000 ரூபாய் என பணம் கொடுத்து ஏமாற்றி விடலாம் என தவறாக எடை போடுகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் கொடுக்க வேண்டும். ஒரு தரப்பு 1000 ரூபாய் தருகிறேன் எனவும், மற்றொரு தரப்பு 1500 ரூபாய் கொடுக்கிறேன் எனக் கூறி வருகிறது.

ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? மொத்தமாக சுரண்டிக் கொண்டுதான் சென்றார்கள். முதியோர் உதவித் தொகையை கூட நிதி நெருக்கடி என கூறி வழங்காதவர்கள்தான் தற்போதைய ஆட்சியாளர்கள். தமிழகம் வெற்றி நடை போடவில்லை. 7 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழ்நாடு தத்தளிக்கிறது.

டீக்கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என்று திமுகவினர் அட்டகாசம் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை நீடிக்கும். அனைவரும் ஆந்திராவிற்கு சென்றுவிட வேண்டியதுதான். திமுக ஆட்சிக்கு வந்தால் வட்ட செயலாளர்கள்தான் காவல்துறை ஆய்வாளர்கள்.

தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு? ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என அதிமுகவினர் போடும் கணக்கு தூள் தூளாக போகிறது. உள் இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை. யாருக்கும் எந்த பலனும் இல்லை. 5 ஆண்டுகளாக அறிவிக்காமல் தேர்தல் நேரத்தில் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை. நடைமுறைக்கு சாத்தியமானவற்றையே அமமுக தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளது.

ஸ்டாலினோ கூட்டத்திற்கு நடுவில் பாலம் போட்டு நடக்கிறார். 5 முறை ஆட்சியில் இருந்த திமுக தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மாதந்தோறும் பணம் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றாமல் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நாங்கள் வழிவகை செய்வோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி 5 ஆண்டுகளில் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

வாஷிங்மெஷின், டிவி, குக்கர் தருவதாக கூறி நாங்கள் ஏமாற்றவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என உறுதி அளிக்கிறோம். துரோக சக்திகளை, தீய சக்திகளை முறியடிக்க வேண்டும்" என்றார் டிடிவி தினகரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com