“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்
சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒரு அணியாகவும், தினகரன் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில், செந்தில் பாலாஜியும் ஒருவர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அமமுக சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் சமீபகாலமாக அவர் பங்கேற்கவில்லை. மேலும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி செல்வது போன்ற புகைப்படம் வெளியானது.
இதுகுறித்து ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அது பழைய புகைப்படம் எனவும் செந்தில் பாலாஜி திமுக வருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும் ராசா தெரிவித்தார்.
இந்நிலையில், சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “தொண்டர்கள் நாம் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க வேண்டும். சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானதுதான்.
துரோகத்தை வேரறுக்க தியாகத்தால் அணிவகுப்போம். ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மீண்டும் இணைய அழைக்கும் துரோக கூட்டத்திற்கு செல்லகூடாது. அமமுகவின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளது. அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளார் என செய்தி பரவியுள்ள நிலையில் தற்போது டிடிவி தினகரன் இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.