ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை
டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக அணிகள் இன்று இணையும் என கூறப்பட்டதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை அடையாறு இல்லத்தில் இந்த ஆலோனை நடைபெற்று வருகிறது. இதில் டிடிவி-க்கு ஆதரவாக உள்ள பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, ரெங்கசாமி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை ஆகிய 18 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர். ஒருவேளை அதிமுக அணிகள் இணைந்து, சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள், ஆட்சி நீடிக்க பெரும் சவாலாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைப்பு இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகம் வருவதாகவும் கூறப்பட்டது. இணைப்புக்குப் பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதனிடையே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து அறிவிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் தயக்கம் காட்டுவதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனால் அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி நீடிக்கிறது.