டிடிவி தினகரன் கட்சியில் இல்லாதவர்: ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி கருத்து
டிடிவி தினகரன் அம்மா அணியில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார், எங்களைப் பொருத்தவரையில் டிடிவி தினகரன் கட்சியில் இல்லாதவர். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் டிடிவி என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தோம். தமிழகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க அடிப்படை வசதிகளை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். ஆர்ப்பாட்டம் செய்ய முறையான அனுமதி வாங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைக்காக போராட்டம் செய்வதை திமுக கேலிக்கூத்து என்று விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அப்படியென்றால் திமுகவின் போராட்டங்களும் கேலிக்கூத்துகள்தான்.
டிடிவி தினகரன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளதில் எங்களுக்கு ஒரு குழப்பமும் இல்லை. அவர் அதிமுக அம்மா அணியில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார். எங்களைப் பொறுத்தவரை அவர் கட்சியில் இல்லை. ஜெயலலிதாவால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டும். இளைஞராக உள்ள அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றமற்றவர் என்று அவர் நிரூபித்தால், அது கட்சிக்கும் நல்லது, அவருக்கும் நல்லது என்று கூறினார்.