குக்கர் சின்னம் - உச்சநீதிமன்றத்தில் தினகரன் கேவியட் மனு தாக்கல்
குக்கர் சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது தாற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அடுத்து வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தையும், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றினையும் பயன்படுத்த அனுமதிக்க கோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 9 இல் வெளியானது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தனது கருத்தை கேட்க கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் நாளை அல்லது நாளை மறுநாள் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் தினகரன் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மதுரை மேலூரில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் விழாவில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.