ரஜினியின் ஆன்மீக அரசியல் தவறாகத்தான் முடியும்: டிடிவி தினகரன்
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என்பது தவறாகத்தான் முடியும் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கடந்த 31ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார். அத்துடன் தனிக்கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் கூறினார். அத்துடன் தான் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல் என்றால் உண்மையான, நியாயமான, நேர்மையான அரசியல் என்று விளக்கமளித்திருந்தார்.
இதற்கிடையே இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ ஆன்மிகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தினால் தவறாக போய் தான் முடியும். இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் என பல மதத்தினர் உள்ளனர். மதம் என்பது வாழ்க்கை முறை. இறை வழிபாடு என்பது ஒழுக்கமுறைக்காக உள்ளது. அத்தகைய மதத்தை அரசியலில் கொண்டு வந்தால் அது வேறு மாறியாக போய்விடும்” என்றார்.