குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் ?

குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் ?

குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் ?
Published on

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்முறை எம்.எல்.ஏவான தினகரனின் எண்ட்ரி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரனின் நடவடிக்கைகள் உன்னிப்பாக ஆளும் கட்சியால் தினமும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளார்களை சந்தித்த தினகரன் ,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தன்னை பார்த்தது குனிந்து கொண்டே சிரித்ததாகவும், சிலர் முகத்தை திருப்பிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இன்று பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி வெளி நடப்பு செய்த தினகரன் ,அமைச்சர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தனக்கு வணக்கம் தெரிவித்ததாக புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

தினகரன் என்ன செய்தாலும் யாரும் அதனை சட்டை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மற்றும் அதிமுக தரப்பில் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ள நிலையில் ,தினகரனின் தினசரி பேட்டிகள் ஆளும் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குறித்து தினகரன் இப்படியெல்லாம் பேசி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா என அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வனிடம் கேட்டபோது “தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தினகரன் செய்யும் இந்தச் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது”என தெரிவித்தார். 

மேலும் தினகரன் ஜெயலலிதா அவர்களின் காலம் தொட்டே கட்சியில் இருந்தவர் என்கிற முறையிலும், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்ற முறையிலும் சிலர் வணக்கம் தெரிவிப்பதோ, புன்னகைப்பதோ தவறில்லை, ஆனால் அதனை இப்படி ஓரக் கண்ணால் பார்த்தார், லைட்டா சிரிச்சார் என வெளியே கூறிக்கொண்டிருப்பது கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். மேலும் நேரடியாக ரகுபதி, ஸ்டாலின், கே.என்.நேரு போன்றோர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்திருப்பதால் இரகசிய கூட்டு எனக் கருதலாமா என வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து தினகரன் ஏன் இது போன்ற கருத்துகளை கூறுகிறார் என அவரது ஆதரவாளர் சசிரேகாவிடம் கேட்டது புதியதலைமுறை. அதற்கு பதிலளித்த அவர், எந்தச் சுய இலாப நோக்கத்தோடு தினகரன் இது போன்று கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் அவரது சட்டமன்ற அனுபவம் குறித்து கேள்வி எழுப்பியதால் நடந்தவற்றை விவரித்தார் என்றும் கூறினார். மேலும் இரண்டாம் நிலை நிர்வாகிகள் அனைவரும் தினகரன் பக்கம் உள்ளதால் ஆட்சி கலைக்கப்பட்டு தினகரன் தலைமையில் புதியஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார். ஆட்சி கையில் இருப்பதால் சுயலாபத்தை கருத்தில் கொண்டு ,ஓ.பி.எஸ் – இ.பி,எஸ் பக்கம் உள்ள அனைவரும் தினகரன்  பக்கம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் யாரையும் குழப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் சசிரேகா தெரிவித்தார்.

3 மாதத்தில் ஆட்சி கலையும் என ஆர்.கேநகர் வெற்றிக்குப் பின் தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வரை எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லை. அப்படி இருக்க யாரை கொண்டு ஆட்சியைக் கலைப்பார் என்ற சந்தேகமும் எழுகிறது. வைகைசெல்வன் கூறுவது போல திமுகவோடு சேர்ந்து இதனை செய்யமுயன்றால் ,அது அவருக்கே பாதகமாக கூட முடியலாம். சசிரேகா தெரிவிப்பது போலதானே நடக்கும் என நினைத்தால் காத்திருப்பதை தவிர வழியில்லை. இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு சாதகமாக வரும் பட்சத்தில் காலங்கள் மாறலாம். கா(ஆ)ட்சிகள் மாறலாம். அதுவரை தினகரன் இது போன்று பேசிக்கொண்டே இருப்பது மட்டுமே அவரை அரசியலில் ஆக்டிவாக இருக்கச் செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com