விசாரணையை சந்திக்கத் தயார்: சவால் விட்ட டிடிவி ஆதரவாளர்!
முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைத்ததற்கு விசாரணைக்கு தயார் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி, ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர், அது குறித்த செய்தியாளர் சந்திப்பிற்காக நேற்று தலைமை செயலகம் சென்றுள்ளனர். அப்போது கோட்டை வாயிலில் பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தவே, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்குதல் நடத்த முயன்றதாகவும் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் இருவரும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், குற்றச்சாட்டை விசாரிக்காமல் தங்களை சிறையிலடைப்பதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார். இதுவரை தன்னை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும், அப்படி அழைத்தால் விசாரணையை சந்திப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.