அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி.கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி முடிவு செய்து, தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வேட்பாளர்களை அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது. ஆனால், அதுவரை தினகரன் பெயர் பெரிதாக அடிபடவேயில்லை. ஆனால், திமுக, அதிகவுக்கு முன்பாக, மார்ச் 17ம் தேதி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக அவர் வெளியிட்டார். அதில், மக்களவை தேர்தலுக்கான 24 வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான 9 வேட்பாளர்கள் பெயரும் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து, அமமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி.கலைராஜனை துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நீக்கியுள்ளார். வி.பி.கலைராஜன் அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளார் பொறுப்பில் இருந்தார். ‘கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி.கலைராஜன் நீக்கப்படுகிறார்’ என்று டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வி.பி.கலைராஜனுக்குப் பதிலாக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சுகுமார் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.