தினகரன் கோரிக்கைக்கு மொத்தமாக முட்டுக்கட்டை போட்ட சபாநாயகர்..!
சட்டப்பேரவையில் இன்று மட்டும் மூன்று கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வர டிடிவி தினகரன் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.
அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான டிடிவி தினகரன், நேற்று தொடங்கி நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று மட்டும் மூன்று கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வர டிடிவி தினகரன் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம், ஒகி புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், பட்டாசு தொழிலாளர்களின் போராட்டம் என பொதுமக்களின் பிரச்னை சார்பாக 3 கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டுவந்து பேசுவதற்காக டிடிவி தினகரன் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் இதில் எதற்குமே அனுமதி அளிக்காமல் சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.
இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் நீக்கம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையிலிருந்து சுயேட்சை உறுப்பினர் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார். 18 பேரின் நீக்கம் குறித்து டிடிவி தினகரன் பேச முற்பட்ட போது, சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், தினகரனை பேச அனுமதிக்குமாறு தெரிவித்தார். இதனையடுத்து குறுக்கிட்டு பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, முதலமைச்சரும், துணை முதலைமைச்சரும் வெளியிட்ட அறிக்கையின் உண்மை தற்போது தெரிவதாக பேசினார். திமுகவுடன் தாம் கூட்டுச் சேர்ந்துள்ளதாக குறிப்பிடும் வகையிலேயே இவ்வாறானக் கருத்தை அமைச்சர் தெரிவித்ததாக குற்றஞ்சாட்டிய சுயேட்சை உறுப்பினர் தினகரன் வெளிநடப்பு செய்தார்.