கட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-க்கு உரிமை உண்டு: திண்டுக்கல் சீனிவாசன்
டிடிவி தினகரனுக்கு கட்சிப் பணிகளை மேற்கொள்ள உரிமை உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன் சென்னை புறப்படும் முன் டெல்லி விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது கட்சியில் இருந்து தன்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கட்சிப் பணிகளை மீண்டும் தொடர்வேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப் பணி தொடர உள்ளதாக கூறியிருப்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிம் கேட்டபோது, "டிடிவி தினகரனை யாரும் நீக்கவில்லை. அவரே தான் விலகிக் கொள்கிறேன் என தெரிவித்தார். கட்சிப் பணி மேற்கொள்ள டிடிவி தினகரனுக்கு உரிமை உண்டு. இது அவரவர்களின் விருப்பம்" என்றார். இதேகேள்வி ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினரகன் கட்சிப் பணி தொடர்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் முடிவு எடுக்கப்படும் என்றார்