திரிபுராவில் நாளை தேர்தல்: மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி கொடுக்குமா பாஜக
திரிபுரா மாநிலத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். மொத்தம் 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 47 மையங்கள் பெண்கள் மட்டுமே மேலாண்மை செய்யும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் ஏறக்குறைய 25 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு மட்டும் மார்ச் 12-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பழங்குடியினருக்காக மட்டும் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி(ஐபிஎப்டி) கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. பாஜக 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியிலும், பாஜக புதிதாக காலூன்றும் முயற்சியிலும் தீவிராமாக பிரச்சாரம் மேற்கொண்டன. மாணிக் சர்க்கார், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.