“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இல்லை” - திரிபுரா காங். அறிவிப்பு

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இல்லை” - திரிபுரா காங். அறிவிப்பு

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இல்லை” - திரிபுரா காங். அறிவிப்பு
Published on

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிபுரா காங்கிரஸ் கட்சியிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் கூட்டணியில்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டாபாஸ் தே தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கடைசிகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அத்துடன் சில அரசியல் கட்சிகள் தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் திரிபுரா மாநில காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைக்கபோவதில்லை என அம்மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டாபாஸ் தே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு டாபாஸ் தே பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. ஆனால் அதேபோன்ற கூட்டணி திரிபுராவில் அமைய வாய்ப்பு இல்லை. ஏனென்றால் திரிபுராவை இடதுசாரிகள் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அழித்து வருகின்றன. இடதுசாரிகள் ஆரம்பித்த அழிவு செயலை தற்போது பாஜக தொடர்கிறது. இதனால் திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் பாஜக அல்லாத கூட்டணி அமையதான் வாய்ப்பு உள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திரிபுராவிலுள்ள 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. அந்தத் தேர்தலில் இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியுற்றது. இதனையடுத்து திரிபுராவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 

சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி 60 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வென்று திரிபுராவிலிருந்த 20 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிற மாநிலங்கள் பாஜகவை எதிர்த்து கூட்டணியிலுள்ளது போல் திரிபுராவிலும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அறிவித்துள்ளார்.

திரிபுராவில் இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி மேற்கு திரிபுராவில் ஏப்ரல் 11ஆம் தேதியும் கிழக்கு திரிபுராவில் ஏப்ரல் 18 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com