திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி துறை சோதனைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல் வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டில் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதேபோல, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், பள்ளியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “ மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது. அரசியல் காரணங்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடுத்தப்படுகிறது. இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்று பதிவிட்டுள்ளது.