கோயில் வாசலில் காலணிகளை துடைத்து பரப்புரையில் ஈடுபட்ட பெண் கைது
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நெருங்கும் நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் வலம் வருகின்றனர். இதற்கு நேர்மாறாக, திருச்சியில் போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து புதுவிதமான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் பெண் ஒருவர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட அந்தப் பெண், சென்னையை சேர்ந்த நர்மதாதான். திருச்சி ஸ்ரீரங்க கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை துடைத்து ஓட்டு போட வேண்டாம் என்று அவர் கூறி வந்தார். அதனையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து வந்த காவல்துறையினர், நர்மதாவை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் கைதானதை அறிந்த பாஜக மற்றும் தேமுதிகவினர், காவல்நிலையத்திற்கு விரைந்தனர். பின் அங்கு வந்து நர்மதாவை விடுவிக்கும்படி, காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் நர்மதா ஏற்கெனவே கைதானது தெரியவந்துள்ளது.