பாரம்பரிய பிடி கருணை கிழங்கு மசியல் - செய்வது எப்படி?

பாரம்பரிய பிடி கருணை கிழங்கு மசியல் - செய்வது எப்படி?
பாரம்பரிய பிடி கருணை கிழங்கு மசியல் - செய்வது எப்படி?

பொதுவாக கிழங்கு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள கூடாது என பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் நம் எல்லோரும் உணவில் கட்டாயம் உணாவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு கிழங்கு உண்டு என்றால் அது கருணை கிழங்கு மட்டுமே தான். நோயில் கருணை காட்டுவது கருணை கிழங்கு மிக சிறந்தது. உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது, இந்த கருணை கிழங்கு. ஆகையால் இந்த கடும் வெயில் காலத்தில் அடிக்கடி கருணைகிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
பெண்களுக்கு தொல்லை தரும் வெள்ளைப்படுதல் என்ற நோய்க்கு இந்த கருணை கிழங்கு ஒரு வரப்பிரசாதம். சித்தா மற்றும் ஆயூர்வேதத்தில் கருணை கிழங்கின் நன்மைகள் பற்றிய ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. உடல் எடை, மூலம், மாதவிடாய் கோளாறுகள், மூட்டு வலி போன்றவற்றிற்கு  இந்த பிடி கருணை ஒரு நல்ல மருந்து.

இவ்வளவு மருத்துவ குணமிக்க இந்த கருணை கிழங்கில் சுவையான மசியல் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பிடி கருணை - 6 
உருளை கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 5 (காரத்திற்கேற்ப) 
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
புளி - அரை எலுமிச்சையளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 கரண்டி அளவு
கருவேப்பிலை - ஒரு கிளை
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
1. முதலில் கருணை கிழங்கு மற்றும் உருளை கிழங்கினை நன்கு கழுவி வேகவைத்துக் கொள்ளவும். பின்பு தோல் உரித்து கைகளால் நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.

2. அரை எலுமிச்சை அளவுக்கு புளியை அரை டம்ளர் நீரில் நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

3. அடிகனமான பாத்திரத்தில் 2 கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும். பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

4. தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து, புளியுடன் சேர்த்து வைத்துள்ள கருணை மசியலை சேர்த்து நன்கு கிளரவும். விருப்பப்பட்டால் ஒரு சிறிய கரண்டி அளவிற்கு தனி மிளகாய் தூள் சேர்க்கலாம். தேவையான உப்பு சேர்த்து மசியல் நன்கு கெட்டியாகி சுருண்டு வந்தவுடன் இறக்கவும். சுவையான கருணை கிழங்கு மசியல் தயார்.

குறிப்பு:
1. கருணை கிழங்கை கடைகளில் வாங்கும்போது பழைய கிழங்காக பார்த்து வாங்கவும். புதிய கிழங்கு எனில் அது நாக்கில் அரிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டது.

2. இது பாரம்பரிய சமையல். நம் பாரம்பரிய சமையல் பாரம்பரிய சுவையில் கிடைக்க நல்லெண்ணெய் சேர்ப்பதே சிறந்தது.

3. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கருணை கிழங்கை பிடிக்காதவர்கள் கூட இந்த மசியலை விரும்பி உண்பர். 

4. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், சுவை அபாரமாக இருக்கும்.

5. உருளை கிழங்கு கூடுதல் சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது. உருளை பிடிக்காதவர்கள் இதில் சேர்க்க தேவையில்லை.


நன்றி: தர்ஷினி ராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com