வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி... வெல்லப்போவது யார்? டெல்லி - பெங்களூரு மோதல்

வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி... வெல்லப்போவது யார்? டெல்லி - பெங்களூரு மோதல்
வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி... வெல்லப்போவது யார்? டெல்லி - பெங்களூரு மோதல்

இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் தலா 7 வெற்றிகளைப் பெற்றுள்ள டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும்.

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் அபுதாபியில் இன்று மோதுகின்றன.

இரு அணிகளுமே இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்யும். மாறாக தோல்வியடையும் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, இதர அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

டெல்லி அணியை பொறுத்தவரை, தொடக்கம் முதல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேறி வந்த சூழலில், தடாலடியாக சறுக்கலை சந்தித்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது டெல்லி. பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அந்த அணி வீரா்கள் தடுமாறுகின்றனா். அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்த ஷிகர் தவான் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

இதே நிலைமையில் தான் பெங்களூரு அணியும் இருக்கிறது. கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி கண்ட பெங்களூரு அணியும் நிலையற்ற பேட்டிங்கால் தவிக்கிறது. கேப்டன் கோலி, டி வில்லியா்ஸ் ஆகியோரையே அந்த அணி பேட்டிங்கிற்கு பெரிதாக நம்பியுள்ளது. பந்துவீச்சிலும் பலம் கூட்டினால் மட்டுமே பெங்களூரு அணியால் நிமிர முடியும்.

போட்டி நடைபெறும் இடத்தில் பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால் டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் முதலில் பந்துவீசவே தீா்மானிக்கும். அப்போதுதான் தங்களது இன்னிங்ஸின்போது பனிப்பொழிவு காரணமாக பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் மாறியிருக்கும்.

டெல்லி உத்தேச அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், ஹர்ஷல் படேல், காகிசோ ரபாடா, பிரவீன் துபே / ஆக்சர் படேல், ஆர் அஸ்வின், அன்ரிச் நார்ட்ஜே

பெங்களூரு உத்தேச அணி: படிக்கல், ஜோஷ் பிலிப், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், குர்கீரத் சிங் / சிவம் டியூப், கிறிஸ் மோரிஸ், இசுரு உதானா / மொயீன் அலி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி

நேருக்கு நோ்: டெல்லி - பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 25 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் பெங்களூா் 15, டெல்லி 9 வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com