அசுர பலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்?

அசுர பலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்?
அசுர பலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்?

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும், டெல்லி அணி ‌9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுள்ள ராஜஸ்தான் மற்றும் நடப்பு சீசனில் ஆதிக்கம் நிறைந்த அணியாக பார்க்கப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ்... இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்

நடப்பு சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் நிறைந்த அணியாக வலம் வருகிறது டெல்லி கேப்பிட்டல்ஸ். பேட்டிங்கில் பிரித்வி ஷா, ஷிகர் தவன், ஸ்ரேயஸ் அய்யர், பந்த் ஆகியோர் தூண்களாக உள்ளனர். ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் மற்றும் ஹெட் மெய்ர் மத்திய வரிசையில் ஸ்கோரை உயர்த்த பக்கபலமாக உள்ளனர்.

பந்து வீச்சில் தென்னாப்ரிக்க வேகப்புயல்கள் ரபாடா மற்றும் நாட்ஜ் எதிரணியிருக்கு நெருக்கடி கொடுக்கும் அஸ்திரங்களாக உள்ளனர். அக்ஷர் படேல் மற்றும் அஷ்வின் சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு கூடுதல் வலுசேர்க்கின்றனர். 5 ஆவது பந்து வீச்சாளராக பயன்படுத்தப்படும் ஹர்ஷல் படேல், இஷாந்த் சர்மா போன்றோர் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பலவீனம்.

ஷார்ஜா மைதானங்களுக்கு வெளியே வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் மட்டுமே நம்பிக்கையளிக்கும் ஃபார்மில் உள்ளார். சாம்சன், கேப்டன் ஸ்மித் ஆகிய இரு நம்பிக்கை நட்சத்திரங்களும் ரன்களைச் சேர்க்க திணறி வருகின்றனர். இளம் வீரர்கள் ஜெய்ஷ்வால், ரியான் பரக் ஆகியோரும் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்துவதில்லை. லம்ரோர் மட்டும் ஆறுதல் அளித்து வருகிறார்.

மத்திய வரிசையில் நிலைத்து விளையாடி ஸ்கோரை உயர்த்த அனுபவ பேட்ஸ்மேன்களும் அணியில் இல்லை. ஆர்ச்சர், டாம் கரண், திவேதியா ஆகியோர் சராசரியான பங்களிப்பை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் வழங்கி வருகின்றனர். அங்கித் ராஜ்புத், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுப்பது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலவீனம்.

வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, அசுரபலமிக்க டெல்லி அணிக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கும் களத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com