இரட்டை இலை யாருக்கு? அக்.31-க்குள் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு!
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டது.
இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாகவும், அதனை மீட்க வேண்டுமெனவும் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் 3100 பேர் உள்ள நிலையில், ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி, வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜரான ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் வி.கே.சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால், வழக்கு தீர்ப்புக்காக இன்று ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன் படி, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தல் வரும் சூழலில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.