அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் - ஸ்டாலின் அறிக்கை
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகின்ற 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக மாவட்ட தலைநகரங்களில் நடத்திட அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, இதற்கான தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்துவது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை மனதில் வைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட கழக செயலாளர்கள், அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அறவழி ஆர்பாட்டத்திற்கு முன் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டு, முறைப்படி அனுமதி பெற்று அமைதி வழியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தும் ஆர்பாட்டத்தை நடத்திட வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல் சட்டத்தின் ஆட்சியை மதித்து, ஜனநாயகரீதியில் நடைபோடும் இயக்கம். ஆகவே, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அறவழியில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையையும், சமூக நீதியையும், மாநில உரிமையையும் வென்றெடுக்க, கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், அனைத்துக் கட்சியினருடன் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்." என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.