டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் - விசாரணை கோரும் அரசியல் கட்சி தலைவர்கள்
அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி.யின் “குரூப் -4” தேர்வு முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்காக வெளிவரும் விபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட “குரூப் - 4” தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான லஞ்சப் பணம் கைமாறிய விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குரூப்-4 தேர்வு முறைகேடுகளின் அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பு தற்போது, குரூப்-2 தேர்விலும் கையூட்டுகள் வழங்கப்பட்ட விபரங்களும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெளிவருகின்றன. தேர்வாணையம், காவல்துறை, பயிற்சி மையங்கள் என பல வகைகளில் ஊழல் கூட்டம் இதற்கு பின்னணியாக இயங்கி வந்துள்ளது.
இதன் மூலம் அனைத்து குரூப் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்ற பலமான சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமென்று பல சிரமங்களுக்கிடையே ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுத்து, பல நூல்களைப் படித்து தயார்படுத்தி வந்த லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
எனவே, முறையாகவும், நேர்மையாகவும், வெளிப்படையான விசாரணை நடைபெறும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட உயர் பதவியில் உள்ளவர்கள் உட்பட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தமிழ்நாடு பொது தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே பலமுறை எழுந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பற்றி முழுமையாக விசாரிக்க இனி அப்படி ஒரு குற்றச்சாட்டு எழாத அளவிற்கு உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தடுக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.