உள்ளாட்சித் தேர்தல்: 3 மாதம் அவகாசம் கோரி மனு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்தப் பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவற்கான தேதியை அறிவிக்க வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.